கரும்பில் தாய்குருத்து வெட்டும் கருவி, வாழை நாற்று நடும் கருவி, சிறுதானியங்களைச் சேமிக்கும் கலன்!
கோயம்புத்தூரில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், அவ்வப்போது புதிய பண்ணைக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது கரும்பில் தாய் குருத்து வெட்டும் கருவி, வாழை நாற்று நடும் இயந்திரம், சிறுதானியங்களைச் சேமிக்கும் கலன், களையெடுக்கும் கருவி, காற்று உந்துவிசை அடுப்பு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை, பயன்பாடு உள்ளிட்ட விவரங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
1. கரும்பில் தாய்க் குருத்து வெட்டும் கருவி
தாய்க் குருத்தை வெட்ட இந்தக் கருவி பயன்படுகிறது. இதன் மூலம் சீரான, பருமனான மற்றும் அதிக எண்ணிக்கையிலான கரும்புகள் கிடைக்கும். எளிதாகத் தொழிலாளர்கள் நடந்துகொண்டே கரும்பு தாய்க் குருத்துகளை வெட்ட முடியும். நின்று கொண்டே இந்தக் கருவியை இயக்க முடியும் என்பதால் குனிந்து வேலை செய்ய வேண்டியதில்லை.
கருவியின் விலை : ரூ.1,000/-
வெட்டும் செலவு : ரூ.465 (ஹெக்டேருக்கு)
நேரம் சேமிப்பு : 44%
ஆள் செலவு சேமிப்பு : 47%
கருவியின் எடை : 1.6 கிலோ
2. களை எடுக்கும் கருவி
பிரஷ் கட்டர் என்று அழைக்கப் படும் புதர் வெட்டும் இயந்திரத்தில் மாட்டி இயக்கக்கூடியது இந்தக் கருவி. பெட்ரோல் இன்ஜினால் இயங்கக்கூடிய இந்தக் கருவியைக் கைகளாலேயே இயக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு ஆட்களால் செய்யக்கூடிய களை எடுக்கும் செலவில் 4,000 ரூபாயை மிச்சப் படுத்தலாம். களையெடுக்கும் நேரமும் 50 சதவிதவிகிதம் மிச்சப்படும். களை எடுக்கும் கருவி தனியாக இருப்பதால் இதை அகற்றிவிட்டு அந்தந்த வேலைக்கான கருவியை மாற்றி புதர்களை அகற்றுவது, தீவனப் புல் வெட்டுவது என மற்றப் பணி களுக்கும் பயன்படுத்தலாம்.
இயந்திரத்தின் விலை - ரூ.20,000
களை எடுக்க ஆகும் செலவு - ரூ. 5,224/ ஹெக்டேர்
களை எடுக்கும் திறன் - 79.3% to 81.2%
சேமிக்கப்படும் பணம் மற்றும் நேரம் - 44% - 52%
3. திசு வளர்ப்பு வாழை நாற்று நடும் இயந்திரம்
டிராக்டர் மூலம் இயங்கும் இந்த இயந்திரம், திசு வளர்ப்பு முறையில் உருவாக் கப்பட்ட வாழை நாற்றுகளை நடவு செய்யப் பயன்படுகிறது. 30 செ.மீ ஆழத்துக்கு மண் தளர்த்தப்பட்டு 15 - 20 செ.மீ ஆழத்தில் நாற்றை நடலாம்.
இருவரிசைகளில் 1.5 மீட்டர் இடைவெளி யில் நாற்றுகளை நடலாம். ஒரு ஹெக்டேரில் நாற்றுகளை நட ரூ.2,500 செலவாகும். இதுவே வழக்கமான முறையில் நாற்று நடவு என்றால் ஒரு நாற்றுக்கு 6 ரூபாய் வீதம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.18,500 செலவாகும்.
இயந்திரத்தின் விலை - ரூ.90,000
வேலைத்திறன்- 2.5 ஹெக்டேர்/ஒரு நாளுக்கு
சேமிக்கப்படும் நேரம் - 70%
சேமிக்கப்படும் ஆட்கள் - 90%4.
சிறுதானியங்களைச் சேமிக்கும்
காற்றுப் புகா சேமிப்புக் கலன்
இன்று தானியங்களாக விற்பதைவிட அவற்றை அரைத்து அரிசியாக விற்கும்போது கூடுதல் வருமானம் கிடைக்கிறது. அதுவும் சிறுதானியங்களை உமி நீக்கி அரிசியாக விற்கும்போது நல்ல விலை கிடைக்கிறது. சிறுதானிய அரிசி வகைகளை சேமிக்கும் வகையில் கலன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது துருப்பிடிக்காத எஃகு (எஸ்.எஸ் - 304) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பண்ணையில் தேவையான இடங்களுக்குச் சுலபமாக எடுத்துச் செல்லலாம். சேமிப்புக் காலத்தில் பூச்சிகள் வராமல் தடுக்க வல்லது இந்தக் கலன். இதில் 6 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.
காற்றுப் புகா சேமிப்புக் கலனின் விலை - ரூ.1,75,000
கொள்ளளவு - 1,000 கிலோ
உமி நீக்கிய சிறுதானியங்களின் இருப்புக் காலம் - 180 நாள்கள்.
5. காற்று உந்துவிசை அடுப்பு
எரிபொருள் சிக்கனத்தை மேற்கொள்ள இது உதவுகிறது. அதிக எரிதிறன் (34%) கொண்டது. சாதாரண விறகு அடுப்புகளை விடச் சுமார் 62% குறைவான மாசு வெளியிடும்.
அடுப்பின் விலை - ரூ.3,500 மற்றும் ரூ.5,000 (சூரிய மின்சக்தி இணைப்புடன்)
வேலைத்திறன் - 3.2 கிலோ வாட் வெப்ப வெளியீடு
எரிபொருள் பயன்பாடு - ஒரு மணி நேரத்துக்கு 2 கிலோ
நேர சேமிப்பு - 40%
கருவிகளை வாங்குவது எப்படி?
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகினால் இந்தக் கருவிகள் உற்பத்தி செய்து வழங்குபவர்களின் தொடர்பு எண்களை கொடுப்பார்கள்.
தொடர்புக்கு,
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
தொலைபேசி:
0422 6611255, 6611455.
Comments
Post a Comment